தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு காலம் பதில் சொல்லும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட கருத்துக்கு நடிகைகள் வரலட்சுமி, சமந்தா ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
2004-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது வைரமுத்துவிடம் இணக்கமாக நடக்கச்சொல்லி ஏற்பட்டாளர்களால் வற்புறுத்தப்பட்டதாக சின்மயி தெரிவித்து இருந்தார்.
வைரமுத்து தங்கியிருந்த அறைக்குள் செல்லும்படி நிர்பந்திக்கப்பட்டதாகவும், மீறினால் எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிடைக்காது என மிரட்டப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
சின்மயி தெரிவித்த குற்றச்சாட்டுக்களால் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரமுத்து குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் மௌனத்திற்குப் பிறகு வைரமுத்து ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
அதில் அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாக மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக, தான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றுள் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார்.
உண்மைக்குப் புறம்பான எதையும் தான் பொருட்படுத்துவதில்லை என்றும் உண்மையை காலம் சொல்லும் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.