வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பழனியில் உள்ள பெருமாள் கோயில்களில் திறக்கப்பட்ட சொர்க்கவாசலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோயில், மற்றும் அகோபில வரதராஜ் பெருமாள் கோயிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசலில் தாயாருடன் எழுந்தருளிய பெருமாள், பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்றார். அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பெருமாளுக்கு பலவகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்ட பரமபத சொர்க்கவாசலில், பல்லக்கில் எழுதருளிய பெருமாள் வலம் வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சுவாமி தரிசனம் செய்தனர்.