திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல்பத்து முதல் நாளான இன்று, ஸ்ரீ நம்பெருமாள், சூரிய பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று துவங்கியது. வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவின் ஒரு பகுதியான, பகல் பத்து திருவிழா இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள், நீள் முடி கீரிடம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூசனம், பவளமாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், பகல்பத்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வரும் டிசம்பர் 24ஆம் தேதி நாச்சியார் திருக்கோலமும், டிசம்பர் 25ஆம் தேதி முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பும் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.