கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி, வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் மதுரையை வந்தடைந்தது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து தினமும் சுவாமி வீதியுலா வரும் நிகழ்வும், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் போன்ற விழாக்கள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் நாளை நடைபெறுகிறது. இதற்காக நீரின்றி இருந்த வைகைக்கு புத்துணர்வு ஊட்டும் வகையில், கடந்த 16ஆம் தேதி, வைகை அணையில் இருந்து வினாடிக்கு216 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வைகை நீர், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் மதுரையின் மையப்பகுதியான ஏ.வி.மேம்பாலத்துக்கு வந்தடைந்தது. இதனால் மதுரை மக்கள் ஆற்றில் இறங்கி, கால்நனைத்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைக்கொண்டாடும் வகையில் மேம்பாலங்களின் மேல் இருந்தும், ஆற்றின் கரையிலிருந்தும் வைகை நீரை செல்பி எடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மலர் தூவி வைகை நீரை மக்கள் வரவேற்றனர்.