ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம், மதுரை வைகை ஆற்றில், 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தடுப்பணைகளில், நீர் நிரம்பி வருகின்றன. இது குறித்த செய்தித் தொகுப்பு
தூங்காநகரம் என்று சொன்னால் மதுரை என்பது அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரையின் மற்றொரு சிறப்பு மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் நகரின் மத்தியில் உள்ள வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் திருவிழாதான். அப்படிப்பட்ட மதுரையில் கடந்த சில வருடங்களாக போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால், வைகை ஆற்றில் நீர் இன்றி வறண்டு காணப்பட்டது. நிலத்தடி நீரும் 500 முதல் 1000 அடி வரை என இருந்த நிலையில், ஆழ்குழாய் கிணறு போட்டால் கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் நகரின் மத்தியில் சுமார் 8 கிலோ மீட்டர் துரத்திற்கு பயணிக்கும் வைகை ஆற்று நீரை சேமிக்கவும், தடுப்பணைகளை புதுப்பிக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் பூங்காக்கள் அமைத்தல், சாலை அமைக்கும் பணி, தடுப்பணைகளை புதுப்பிக்கும் பணி, ஆற்றில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள, 21 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கினார்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வைகையாற்றில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வைகையாற்றின் ஏ.வி. மேம்பாலம் மற்றும் அதன் அருகே உள்ள நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த முதல் தடுப்பணை, சுமார் 10 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், ஒபுலாபாடித்துறை பாலம் மற்றும் அதன் அருகே உள்ள இரண்டாவது தடுப்பணையையும், 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைகள் சுமார் 5 அடி உயரமும், 1 புள்ளி 4 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இதன் மூலம், சுமார் 50 மில்லியன் கனஅடி முதல், 300 மில்லியன் கனஅடி வரையில் நீரை சேமித்து வைக்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பணியூர் கால்வாய் தூர்வாரப்பட்டு, வைகை ஆற்றின் தடுப்பணைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தமிழக முதலமைச்சரின் உத்தரவை அடுத்து, சிவகங்கை மற்றும் ராமநாதபுர மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தூர்வாரப்பட்டும், தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டும், புதுப்போலிவுடன் காட்சியளிக்கும் வைகையாற்றில் ஆர்பரித்து ஓடும் நீரைக் காண, பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுப்படுத்தப்பட்ட வைகையாற்றை காண வரும் மக்கள், இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.