ஆன்மீக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஊராக விளங்கும் வடலூர்

ஆன்மீக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஊராக விளங்குவது வடலூர். தைப்பூச தினத்தில் கடவுளை ஜோதி வடிவில் கண்ட வள்ளலார் வசித்த வடலூர் குறித்த சிறப்பு தகவல்களை காணலாம்.

கடலூர் மாவட்டம், வடலூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருதூர் கிராமத்தில் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார், ராமையா பிள்ளைக்கும், சின்னம்மைக்கும் 1823-ல் பிறந்தார்.தனது ஒன்பதாவது வயதில் சொற்பொழிவுகள் மூலம் தன்னுடைய ஆன்மீக பயணங்களை தொடங்கினார். இல்லறத்தில் நாட்டமின்றி கடவுளை நாடிய வள்ளலார், அவரை ஜோதி வடிவில் வணங்கினார்.சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு வந்து, அங்கிருந்து வடலூர் அருகே உள்ள கருங்குழிக்கு வந்து தங்கி, மக்களுக்கு ஆன்மீகம், சித்தமருத்துவம், உள்ளிட்ட வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தார்.

கருங்குழியில் தங்கி இருந்த போது எண்ணை என நினைத்து, தண்ணீரை ஊற்றி விளக்கெறிய செய்த அதிசயமும் நிகழ்ந்தது. அவரது போதனைகளான ஐந்து திருமுறைகளும் உருப்பெற்றது இங்குதான்.கருங்குழியை அடுத்த மேட்டுகுப்பத்தில் இவர் அமைத்த நீர் ஊற்று தற்போதும் காணப்படுவது அதிசயமே! சன்மார்க்க கொள்கைகளான ஜீவகாருண்யம், கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற கருத்துக்களை மக்களிடையே பரப்ப 1867ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் துவங்கி சன்மார்க்க நெறியை பரப்பினார். பசியை பிணியாக கருதிய வள்ளலார், பசித்து வருவோருக்கு உணவு அளித்திட தர்மசாலையை நிறுவி அன்னதானம் வழங்க அணையா அடுப்பை ஏற்றினார்.

இறைவனை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் 1872ல் சத்திய ஞான சபையை நிறுவினார். தான் நிறுவி வாழ்ந்த சித்திவளாகத்தில் தான் வாழ்ந்த அறையிலேயே 1874ல் இறைவனுடன் ஜோதியாக கலந்தார்.உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாகவும், சாதி, மதம், இனம், மொழி, தேசம் முதலிய வேறுபாடுகள் இல்லாத அனைவரும் பிராத்தனை செய்யும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.இந்த சபையில் தினமும் திருவருட்பா பாடல்கள் பாடப்பட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. மேலும் தைப்பூச தினத்தில் இங்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு ஆறு காலம் ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது.

Exit mobile version