ஒரு கொலை.. ரத்தக் கறை படிந்த மனிதர்கள். இப்படி துவங்குகிறது வடசென்னை. ஏன் அந்த கொலை, யார் செய்தது, கொலை செய்யப்பட்டவர் யார்? அவருடைய வரலாறு என்ன? என்ற கேள்விகளோடு திரைக்கதை பயணிக்க துவங்குகிறது, கூடவே நாமும் வடசென்னைக்குள் அடியெடுத்து வைக்கிறோம். கட்டுமரம், விசைப்படகு, மீனவ குடிசைகள், அதனை ஒட்டிய அரசுக் கட்டிக் கொடுத்த குடியிருப்புகள், சிறைவாழ்க்கை என வடசென்னையின் அத்தனை அம்சங்களையும் அப்படியே அள்ளி வந்து காட்டியிருக்கிறது வடசென்னை.
இந்த படத்தில் நாம் முதலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கியிருக்கும் நான்காவது படம் வடசென்னை. முழுக்க, முழுக்க தன்னுடைய ஸ்கிரிப்ட்டுக்குள் மூழ்கியிருக்கிறார் வெற்றிமாறன் என்பது படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. எந்த அளவு வடசென்னையை ஸ்டடி செய்திருக்கிறார் என்றால் கதாபாத்திரங்களின் பெயர்கள், அவர்களது வாழ்விடங்கள், இயல்பாக அவர்கள் பேசிக்கொள்ளும் வசைச் சொற்கள் என கதைக்கு நியாயம் செய்திருக்கிறார். திரைக்கதையை முன்பின்னாக நகர்த்தி எந்த சம்பவம் – எந்த காலகட்டத்திற்கான தொடர்ச்சி, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் செதுக்கியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. நடிகர்களின் பங்களிப்போ, மேம்பட்ட தொழில்நுட்பங்களோ மட்டும் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்து விட முடியாது. சொல்ல வந்த கதையின் மீது இயக்குனருக்கு இருக்கும் பிடிமானமே திரையில் வெளிப்படும். வடசென்னையின் ஆன்மாவை திரைப்படமாக உருமாற்றியிருக்கிறார் வெற்றிமாறன்.
தனுஷ். வணிகரீதியான வெற்றி சாத்தியமிக்க நடிகர்களில் தனுசும் ஒருவர். ஆனால் அதனைத் தாண்டி சமூகத்தின் பேசுபொருட்களை கதைக்களன்களாக தேர்வு செய்வதே அவருடைய தனித்துவம். எந்தவயது தோற்றமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். திரையில் திரும்பிய திசையெல்லாம் ஏராளமான கதாபாத்திரங்கள். அனைவருக்கும் இடம் வழங்கி, தனக்கு தேவையான இடத்தில் ஸ்கோர் செய்வதில் அடங்கியிருக்கிறது தனுசின் வெற்றி. சந்தர்ப்பவசத்தால் அதிகார சூழல் போட்டியில் சிக்கிக் கொள்ளும் ஒருவனின் உளநிலையை திரைக்கு கடத்தியதில் தனுஷ் என்னும் அசகாய நடிகன் வெளிப்படுகிறான். குறிப்பாக சிறைக்குள் நடக்கும் காட்சிகளில் அவரது உடல்மொழி அபாரம். அன்பு என்ற கதாபாத்திரம் தனுசின் திரைவாழ்வில் ஒரு கல்வெட்டு.
ஐஸ்வர்யா ராஜேஷ். வெளிமாநிலங்களில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்யும் காலகட்டத்தின் தமிழ் மண்ணின் அசல் முகமாக, யதார்த்த நடிப்பின் நாயகியாக அதகளம் செய்கிறார் ஐஸ்வர்யா. காதலின் மிடுக்கை இப்படி காட்ட முடியுமா? என்று வியக்க வைக்கிறார் தமது நடிப்பால். ஐஸ்வர்யா புயல் என்றால், ஆண்ட்ரியா அமைதிப் புயலாக மிரட்டுகிறார். காத்திருந்து பழிவாங்கும் கதாபாத்திரத்தால் நெஞ்சை உலுக்குகிறார்.
சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் என நான்கு பேரும் கதையை நகர்த்தி செல்லும் நான்கு கால்களாக உள்ளனர். அதிகாரத்தின் மீதான மோகம் தான், மனிதர்களின் ஆதார உணர்ச்சி என்பதை தங்கள் நடிப்பால் வெளிக்கொண்டு வந்துள்ளனர். ராஜன் என்ற கதாபாத்திரத்தில் அமீர் என்ற இயக்குனருக்குள் இருக்கும் நடிகன் ஆச்சர்யப்படுத்துகிறான்.
நடிகர்கள் திரையில் மிரட்ட, இசையால் திரைக்குப் பின்னால் முழுமையாக துவம்சம் செய்கிறார் சந்தோஷ் நாராயணன். துரோகத்தின் வலியை, இழப்பின் வெறுமையை, இயலாமையின் கையாலாகத் தனத்தை என உணர்ச்சிகளுக்கு இசைவடிவம் கொடுப்பதில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார் சந்தோஷ் நாராயணன். வடசென்னை வாழ்வியலோடு ஒட்டி உறவாடும் கானா பாடல்களை தேவையான இடத்தில் பயன்படுத்தியது அவரது புத்திசாலித்தனம்.
குறுகிய தெருக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், இருள் ஒளிரும் கடல், மிரள வைக்கும் சிறை என ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் பங்களிப்பும் வடசென்னைக்கு உயிரூட்டுகிறது. காலங்கள் மாறி பயணிக்கும் கதையில் மாயாஜாலம் செய்கின்றனர் எடிட்டர்கள் வெங்கடேஷ் மற்றும் ராமர். கொஞ்சம் பிசகினாலும், கதை புரியாமல் போய்விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் கயிறுமேல் நடக்கும் வித்தைக்காரன் போல் நுணுக்கமாக செயல்பட்டுள்ளனர் இருவரும். கதையின் பெரும்பகுதி சிறையில் நடக்கிறது. நாம் பார்த்திராத உலகின் வலிமிகுந்த காட்சிப் பதிவு. வேண்டுமென்றே திணிக்காமல் கதைக்கு தேவையான இடத்தில், அளவில் நம்மை சிறைப்படுத்துகிறது அந்த ஜெயில்.
ஆபாச சொற்கள் என்றும், ஐயையோ இதையெல்லாமா பேசுவது என்று பொதுஜனம் மிரளும் பல சொற்கள் போகிற போக்கில் பேசப்படுகிறது வடசென்னையில். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வட்டார வழக்கு உள்ளது. அவற்றிலும் வசைச் சொற்கள் உண்டு. ஆனால் பட்டவர்த்தனமாக பேசப்படுவதால் வடசென்னை வார்த்தைகள் நம்மை ஒருகணம் அதிரவைக்கும். ஆனால் அதுவும் அந்த வாழ்வியலின் பகுதிகளில் ஒன்று என்ற புரிதல் வேண்டும்.
உலகம் முழுவதும் ஆதிகுடிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வேரோடு பிடுங்கப்படும் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் போது அதனை எதிர்த்து ஏதேனும் ஒரு குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆதிக்கத்திற்கு எதிரான குரல்கள் எப்போதும் துரோகங்களால் தான் வீழ்த்தப்படுகிறது. வாழ்க்கை என்பதே துரோகங்களின் வரலாறு தான், அதன் திரைப்பதிவே வடசென்னை…