யாத்திசை படம் எப்படி?

யா என்றால் தெற்கு என்று பொருள். யாத்திசை என்றால் தெற்கு திசை. தென் திசையை கட்டி ஆண்ட பாண்டியர்களுக்கும் சிறுக்குழுவான எயினர்களுக்கும் இடையே நடைபெறும் அதிகாரப் போட்டியே யாத்திசை திரைப்படமாகும். ஐவகை நிலத்தில் பாலை நிலமும் ஒன்று. அப்பாலை நிலத்தில் வாழ்ந்த மக்களை எயினர், எயிற்றியர் என்ற பொருளில் அழைப்போம். இவர்களின் கூட்டத்தில் ஒருவன் தான் கொதி. பாண்டியர்களை வென்று அங்கு எயினர்களின் ஆட்சி பரவ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவன். அவன் அந்த அதிகாரப்போட்டியில் வென்றானா இல்லையா என்பதே மீதிக்கதை.

திரைப்படம் தொடங்கும் முன்பு இது ஒரு புனைவுக்கதை என்றே சொல்லிவிட்டார் இயக்குநர் தரணி இராசேந்திரன். ஒரு வரலாறை புனைவாக மாற்றி நாவல் எழுதி, அந்த நாவலையே புனைவாக மாற்றி ஒரு படம் எடுத்து இரசிகர்களின் தலையில் கட்டும் இந்த காலத்தில் தொடக்கமே புனைவு என்று சொல்லி படத்தைத் தொடங்கியது சிறப்பு. படத்தில் காட்டப்படும் எயினர் தலைவன், பாண்டிய மன்னன், தேவரடியார்கள், அந்தணர் போன்ற கதாபாத்திரத் தேர்வுகள் அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளது. படத்தின் பிரதான அம்சம் சங்ககாலத் தமிழை திரைப்படத்தில் பயன்படுத்தியதுதான். பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். பல இரசிகர்கள் சப் டைடில் பார்த்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் நம் மொழியின் பெருமை ஒருபுறம் பறைசாற்றும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

பாண்டியர்களின் போர்வீரர்களின் தேர்வுகளிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சிலரின் சிகையலங்காரம் தற்காலத்துடன் பொருந்திப் போகிறது. பயன்படுத்திய கருவிகள் கோடாலி, உருமி, வாள், கேடயம் போன்ற முக்கியவை இதில் காட்சிப்படுத்தப்பட்டது சிறப்பான முறையாகும். பாண்டியர்களின் உடை 300 ஸ்பார்ட்டன்ஸ் திரைப்படத்தையும், யவனர்களின் உடை அபோகலிப்டா திரைப்படத்தையும் நினைவுப்படுத்தியதை மறுப்பதற்கில்லை. அதேபோல போரில் மாண்டவர்களின் மார்பில் கத்தியால் கீறி புதைப்பது போன்ற தமிழர்களின் பண்பாடு போன்ற காட்சிகள் பிரமாதம். ஆனால் மக்களின் பழக்க வழக்கங்களை பெரிதாக காட்டவில்லை. அதையும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு மெனக்கிட்டுருக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பாரட்டுக்கள்.

Exit mobile version