தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி, 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், எந்த மாவட்டத்திலும் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாகவே நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியே நிறைவுபெறாத நிலையில், கடந்த 20ம் தேதி முதல், 18 வயது முதல் 44 வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை, திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆனால், அன்றைய தினம் வெறும் 15 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், போதுமான அளவு இருப்பு இல்லாததால், எந்த மாவட்டத்திலும் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தடுப்பூசி முகாமில் கோவாக்சின் செலுத்த வந்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தடுப்பூசி போடும் முகாமில் முறையான ஏற்பாடு ஏதும் செய்யப்படாததால் தடுப்பு ஊசி போடுவதற்கு வரும் மாற்றுத் திறனாளி மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சேலத்தில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கோவாக்சின் தடுப்பூசி முற்றிலும் தீர்ந்துள்ள நிலையில், முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டும் இரண்டாம் டோஸ் செலுத்தப்படுகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்படாததால் சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வந்த 11 தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தடுப்பூசி செலுத்தி கொள்ள காத்திருந்தவர்கள் டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முதல்கட்டமாக 350 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மற்றவர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் பெற்றவர்களுக்கு இருக்கைகள் இல்லாததால் ஆங்காங்கே விரக்தியுடன் காத்திருந்தனர்.
மதுரையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இணையதளம் மூலம் தடுப்பூசி போட்டு கொள்ள முன்பதிவு செய்திருந்த பலருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. கொரோனா இரண்டாவது அலையில், இளைஞர்கள் மற்று நடுத்தர வயதுடையோர் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post