தடுப்பூசி தட்டுப்பாடு திமுக அரசு அலட்சியம் – காத்திருப்பு, ஏமாற்றம் அலைக்கழிப்பு

தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கால், தடுப்பூசி கிடைக்காமல் நாள்தோறும் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முறையான அறிவிப்பு வெளியிடாததால் தங்களது அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசிக்காக அதிகாலை முதல் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லை என அறிவிக்கப்பட்டதால் ஆவேசமடைந்தனர். நாள்தோறும் தடுப்பூசி முகாமிற்கு வருவதால் தங்களுடைய அன்றாட பணிகள் மிகவும் பாதிப்படைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தடுப்பூசி முகாமில் 250 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், 150 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே நிலை கடந்த 4 நாட்களாக நீடிப்பதாக ஆவேசத்துடன் கூறினர்.

திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு, தடுப்பூசி இல்லை என அறிவித்ததால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று தடுப்பூசி செலுத்தப்படாதவர்களுக்கு, இன்று செலுத்தப்படும் என்று டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்தப்படாததால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாம் பகுதியில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் துளியும் பின்பற்றப்படாதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. தடுப்பூசி குறித்து அறிவிப்பு வழங்க மறுப்பதால் தினந்தோறும் ஏராளமானோர் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரியில் உள்ள முகாமில் அதிகாலை முதலே மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், 2வது தவணை செலுத்துவோருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Exit mobile version