கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்குமா? – கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால் தாய் மரணம்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. ஆத்தூர் அருகே கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதால், இரண்டு குழந்தைகளின் தாய் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்த சுபலெட்சுமி என்பவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 19 ஆம் தேதி, குழந்தைகள் இருவருக்கும் வழக்கமான தடுப்பூசி செலுத்த வேண்டும் என, காட்டுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம், சுபலெட்சுமி கேட்டுள்ளார். அதற்கு, முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான், குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்துவேன் என செவிலியர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. சுபலெட்சுமி, தனக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் என மறுத்த பிறகும், வலுக்கட்டாயமாக அவருக்கு செவிலியர் சித்ரா கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இந்நிலையில், சுபலெட்சுமி வீட்டிலேயே உயிரிழந்தார். வலுக்கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான், சுபலெட்சுமி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வீரப்பன் சத்திரம் அரசு பள்ளியில் 300-க்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் எந்த வயதினருக்கு செலுத்தப்படுகிறது என்ற விவரங்கள், முறையாக அறிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இரண்டு நாள் சிறப்பு முகாமில், 59 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள மாநகராட்சி மையங்களில் பொதுமக்கள் திரண்டனர். ஆனால், 2 நாட்களாக அலைந்தும் தடுப்பூசி செலுத்தாமல் திரும்பிச் செல்வதாக அவர்கள் கூறினர்.

இதேபோன்று, கன்னியாகுமரியில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள, நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்த பொதுமக்கள், தடுப்பூசி கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

Exit mobile version