திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 32 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிகளில் உள்ள மையங்களுக்கு படையெடுத்தனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பொதுமக்கள் காத்துக்கிடந்த நிலையில், 200 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், ஏமாற்றம் அடைந்தனர். தடுப்பூசி இருப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடாததே, குழப்பத்திற்கு காரணம் என குற்றம்சாட்டிய அவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.