இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துவரும் நிலையில் நாடு முழுவதும் தொடங்கிய தடுப்பூசி திருவிழா
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி திருவிழாவில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
தடுப்பூசி திருவிழா தொடங்கிய நிலையில் நாட்டு மக்களுக்கு நான்கு முக்கிய வேண்டுகோள்களை முன்வைத்த பிரதமர் மோடி
ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல்
கொரோனா சிகிச்சைக்கு பணமில்லாமலும், சிகிச்சை பற்றி அறியாமலும் இருப்பபவர்களின் சிகிச்சைக்கு உதவ வலியுறுத்தல்
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதர் மோடி 4 நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என அறிவித்தார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும், மிக விரைவில் தடுப்பூசி செலுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தநிலையில், நாடு முழுவதும் 4 நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து, சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி திருவிழாவில் தகுதியானவர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கு, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
தடுப்பூசி திருவிழாவையொட்டி, பிரதமர் மோடி, நான்கு முக்கிய வேண்டுகோள்களை நாட்டு மக்களிடம் முன்வைத்துள்ளார். முதலாவதாக, ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய வேண்டும் – கொரோனா சிகிச்சைக்கு பணமில்லாமலும், அதுபற்றி அறியாமலும் இருப்பபவர்களின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் – ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவதுடன், பிறரையும் அணிய செய்ய வேண்டும் – யாருக்காவது கொரோனா இருந்தால், அங்குக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாள் தடுப்பூசி திருவிழாவில், தடுப்பு மருந்துகளை வீணடிக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் சனிக்கிழமை வரை 10 கோடியே 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.