கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாடும் முழுவதும் குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. இதனையொட்டி நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய கலாச்சரத்தினையும் பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் விதமாக நடனம் மற்றும் அலங்கார வாகன ஊர்வலம் போன்றவற்றினை செய்து அசத்தினர். அந்த வகையில் உத்ரகாண்ட் மாநிலத்தின் அலங்கார வாகன ஊர்தி குடியரசு தினவிழாவில் சிறப்பாக இருந்ததாக கருதி முதல் பரிசினைப் பெற்றுள்ளது.
அணிவகுப்பில் அலங்கார ஊர்தியில் அந்தந்த மாநில அரசின் சிறப்புகள், சாதனைகள் மற்றும் மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில அரசின் அலங்கார ஊர்தி மாதிரிகளையும் மத்திய அரசின் குழு சோதித்து அவற்றை இறுதி செய்தது. மத்திய அரசு MyGov தளம் மூலம் சிறந்த அணிவகுப்பிற்கான வாக்கெடுப்பை நடத்தியது. அதில், உத்தரகாண்ட் மாநிலத்தின் குடியரசு தின அணிவகுப்பு தான் சிறந்த அணிவகுப்பிற்கான முதலிடத்தை பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் அலங்கார ஊர்தியில் தேவதாரு மரங்கள், கார்பெட் தேசியப் பூங்கா மற்றும் புகழ்பெற்ற ஐபன் கலை இவற்றை தவிர மாநிலத்தின் தனிச்சிறப்பு மிக்க விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் நடுவில் உள்ள ஜாகேஷ்வர் கோயிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து உத்ரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பெருமிதம் அடைந்துள்ளார். இதைத் தவிர, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநில அணிவகுப்புகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.