தேர்தல் வரும் வேளையில் புது முதல்வர்: உத்தராகண்ட்டில் நடந்தது என்ன?

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங் களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.

ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும்.

எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதன் பேரில், நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டேராடூன் வந்த நரேந்திர சிங் தோமர்
இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக பாஜக தலைமை அறிவித்தது.

இதனையடுத்து, இந்தக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டதன்படி புஷ்கர் சிங் சட்டமன்றக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version