மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கம்பட்டி முதல் சமத்துவபுரம் வரை செல்லும் சாலை, ஐந்து கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியே பணிக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரும் சிரமம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத அவல நிலை காணப்படுவதாகவும், மாணவ, மாணவியர் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றியே பள்ளிகளுக்கு சென்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலையை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.