செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களே உஷார்

செல்ஃபோன்கள் நமது வாழ்க்கையை மட்டுமின்றி உடலமைப்பிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஆராய்ந்த ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் செல்ஃபோன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் என்று தெரிவித்த தகவல் இன்று உலகெங்கும் பேசுபொருளாகி உள்ளது. அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விளக்கமாகக் காண்போம்…

ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக் கழக அறிவியலாளர்கள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் போது மனிதர்களின் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த ஆய்வு முடிவுகளில் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்கு உள்ளாக கொம்பு போன்ற கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது, என்று அவர்கள் கூறிய கருத்துதான் மக்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தி உள்ளது. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் உடல் அமைப்பும் அவற்றின் நடவடிக்கைகளால் மாற்றி அமைக்கப்படுகின்றன என்பதே பரிணாமவியல் கொள்கை. நிமிர்ந்து நடந்த மனிதனுக்கு வால் இல்லாமல் போனது அதனால்தான்.

இந்நிலையில் மனிதர்கள் செல்போன்களைப் பயன்படுத்தும் போது அதன் திரையைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொண்டே இருப்பதால், முதுகெலும்பில் இருந்து தலையின் முழு எடையும் தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாறுகிறது. இந்த எடை தரும் அழுத்தத்தினால் மண்டை ஓட்டுக்குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற எலும்பு வளர்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்தக் கருத்திற்கு ஆதாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸ்-ரேக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால், உள்ளுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு துருத்திக் கொண்டு வளர்வதை உணர முடியும் என்றும் இவர்கள் கூறுகின்றனர். மண்டைக்குள் வளரும் இந்தக் கொம்பின் விளைவுகள் என்ன என்பது குறித்த ஆய்வுகள் இனி அங்கு முன்னெடுக்கப்பட உள்ளன.

எது எப்படி இருந்தாலும் செல்ஃபோன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதுதான் மனநலம் மற்றும் உடல்நலம் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும், என்பதே மானுடவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version