வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே மாதத்தில் நடந்த தேர்தலில் வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரோ வெற்றிபெற்று, பதவியேற்றார். இந்நிலையில் மதுரோ முறைகேடு செய்து வென்றதாகக் கூறி, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகாரம் அளித்தன.
இதையடுத்து கடும் அதிருப்தியடைந்த அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவிட்டார். தொடர்ந்து வெனிசுலாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசுலா மீது கடந்த 29 ஆம் தேதி அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும் வெனிசுலாவின் வளங்களை திருடிவரும் அதிபர் மதுரோவிற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் அமெரிக்கா எச்சரிக்கை தெரிவித்துள்ளது.