இந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்ப்

இந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா., பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இதில் முதல் கட்டமாக, ஹூஸ்டன் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார். அதன்பின் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று பேசினார்.

இந்நிலையில் ஐ.நா. தலைமையகத்தில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு நாட்டு தரப்பிலும் பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐநா தலைமையகத்தில் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி இந்தியாவை ஒரு தந்தையை போல் ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளார் எனவும், ஒருவேளை அவர்தான் இந்தியாவின் தந்தையாக இருக்கலாம் எனவும் கூறினார்.

Exit mobile version