குர்து மக்கள் மீதான துருக்கியின் தாக்குதல், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த குர்து மக்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?
துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் ஆர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளின் மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் மக்கள்தான் குர்துகள். இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஸ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர். இவர்கள் ஒரு சிறுபான்மை இனக்குழு, சுமார் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை இருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குர்து மக்கள் வாழ்வதற்கு விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் உள்ள துருக்கியில், குர்துக்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. தனி தேசம் கேட்கும் குர்துக்கள் தங்கள் நாட்டின் எல்லை அருகே இருப்பதை துருக்கி விரும்பவில்லை. குர்துகள் துருக்கியில் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர்.
துருக்கியில் உள்ள குர்து மக்கள், அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதற்காகக் போராடி வந்தனர். இந்நிலையில்தான், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறின. இந்த நிலையானது குர்து போராளிகளை தாக்க நல்ல சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
குர்து இனப் போராளிகளை அழித்து விட்டு, அவர்கள் வாழும் பகுதியில் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் துருக்கி தாக்குதலைத் தொடங்கி உள்ளது. துருக்கி படைகளை சமாளிக்க முடியாமல் குர்து போராளிகள் திணறுகின்றனர், கொத்து கொத்தாக இறக்கின்றனர். குர்துகளுக்கு ஆதரவாக, துருக்கி படைகளை எதிர்த்து போரிட சிரியா ராணுவம் வடக்கு பகுதியை நோக்கி நகர்கிறது. இந்த சூழலில் சிரியாவில் ரஷிய படைகளும் குர்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிரியா மீதான ராணுவ தாக்குதலை கண்டித்து துருக்கியின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. மேலும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டுமென துருக்கியை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. சண்டையை நிறுத்தவில்லையென்றால் துருக்கியின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கவலை இல்லை என்றும், குர்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய எர்டோகன், “அவர்கள் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க மாட்டோம்” என்று கூறினார்.மேலும் அவர், “சண்டையை நிறுத்துமாறு அவர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். பொருளாதார தடைகளை அறிவிக்கிறார்கள். எங்கள் குறிக்கோள் தெளிவாக உள்ளது. எந்தவொரு தடை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை” என கூறியுள்ளார் அதிபர் எர்டோகன்.
இதனால் குர்து மக்கள் தொடர்ந்து அபாயத்தில் வாழும் நிலை ஏற்பட்டு உள்ளது. ரஷ்யாவின் ராணுவமும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும் குர்துகளைக் காப்பாற்றுமா? – என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்…