கொரோனாவின் 3டி அணு வரைபடத்தை வெளியிட்ட அமெரிக்க ஆய்வாளர்கள்

 கொரோனா வைரஸ்சின் முக்கிய பகுதியின் 3டி அணு வரைபடத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ்சுக்கு எதிரான ஆய்வுகளில் கிடைத்த மைல்கல் வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் இந்த வைரஸ்சுக்கு எதிராக இதுவரை எந்த தடுப்பு முறைகளும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 கொரோனா வைரஸ் மனிதர்களை எப்படி பாதிக்கின்றது என்று தெரியாத காரணத்தால்தான் அதனை நவீன மருத்துவத்தால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளின் மிகப் பெரிய முன்னேற்றமாக கொரோனா வைரஸ்சின் முக்கிய பாகத்திற்கு உரிய முதல் 3டி அணு வரைபடத்தை உருவாக்கி உள்ளதாக அமெரிக்க அறிவியலாளர்கள் அறிவித்து உள்ளனர். இந்த 3டி அணு வரைபடத்தை உருவாக்கும் குழுவில் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய சுகாதார நிறுவனம் – ஆகிய அமைப்புகளின் அறிவியலாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.

 வைரஸ்கள் என்பவை அடிப்படையில் புரதங்களால் ஆனவை. இதனால் சீன அறிவியலாளர்கள் வெளியிட்ட கொரோனா வைரஸ்சின் மரபணு குறியீட்டைக் கொண்டு, ஸ்பைக் புரதம் எனும் கொரோனா வைரஸ்சின் ஒரு முக்கியப் பகுதியின் மாதிரியை இந்த ஆய்வாளர் குழு முதலில் உருவாக்கியது.

 

அந்த ஸ்பைக் புரதத்தை கிரையோஜெனிக் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி – எனப்படும் நவீன தொலைநோக்கியைக் கொண்டு 3டி தொழில் நுட்பத்தில் படம்பிடித்து, அதன் மூலமே இந்த 3டி அணு வரைபடம் உருவாக்கப்பட்டு உள்ளதாக ஆய்வுக்குழு கூறி உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்ற மூன்று அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கிரையோஜெனிக் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி என்பது குறிப்பிடத் தக்கது.

 கொரோனா வைரஸ்சின் அதே வைரஸ் குடும்பத்தைத் சேர்ந்தா சார்ஸ், மெர்ஸ் ஆகிய பிற வைரஸ்களையும் ஆய்வு செய்து இந்த 3டி அணு மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது என்பதால் இது நம்பகமான அணு மாதிரியாகக் கருதப்படுகின்றது.இந்த 3டி அணு அமைப்பை ஆய்வு செய்து இனி ஆண்டி வைரல் எனப்படும் எதிர் உயிரி மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி உருவாக்கப்படும் எதிர் உயிரி மருந்துகள் மட்டுமே கொரோனா வைரஸ்சில் இருந்து மனிதர்களுக்கு தற்காப்பைத் தரும்.

 இந்தப் புதிய மாதிரியை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் உலகெங்கும் உள்ள அறிவியலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உள்ள அரிவியலாளர்கள் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Exit mobile version