அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போரின் காரணமாக திருப்பூருக்கு ஆர்டர்கள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு மேம்படுத்தி தரவேண்டும் என்றும் திருப்பூர் தொழில்முனைவோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
உலகின் வல்லரசாக உள்ள அமெரிக்கா, வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தி விதித்துள்ளது. இதனால், அமெரிக்காவைச் சேர்ந்த வியாபாரிகள் 25 சதவீத கூடுதல் வரியை செலுத்தி சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதை காட்டிலும் மற்ற நாடுகளை நாடக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வரிவிதிப்பின் காரணமாக ஏராளமான ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி வரும் என்றாலும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியை பொருத்த அளவிலும் சுமார் பத்தாயிரம் கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி மட்டுமே செய்ய முடியும் என்றும் அந்த அளவிற்கு மட்டுமே தற்போது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளதாகவும் தொழில் முனைவோர் கூறுகின்றனர். எனவே திருப்பூரில் உட்கட்டமைப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு வசதிகளை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே அமெரிக்கா – சீனா வர்த்தக போரை இந்தியா சாதகமாக்கி கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.