சீனாவின் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் கடும் கண்டனம்!

பிரிட்டனின் காலனி நாடாக இருந்து வந்த ஹாங்காங் கடந்த 1997 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி சீனாவுடன் இணைந்தது. ஹாங்காங்கிற்கு சீனா தன்னாட்சி வழங்கிய நிலையில், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை மட்டும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸை சேர்ந்த 2 ஆயிரத்து 878 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே சீனாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹாங்காங் மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் இது என பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version