மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை தனது குண்டுவீசும் விமானத்தில் பயன்படுத்தி அமெரிக்கா புதிய சோதனையை மேற்கொண்டு உள்ளது. ஆயுத பலத்தில் உலகின் முதன்மை நாடாக உள்ள அமெரிக்காவின் இந்த சோதனை உலகநாடுகளுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்து உள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.
விமானங்கள் மூலம் ஆயுதங்களை வீசுவதில் அமெரிக்காவின் தொழில் நுட்பங்கள் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகின்றன. 1945 ஆகஸ்டு 6ஆம் தேதி அமெரிக்க குண்டுவீசும் விமானம் ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய அணுகுண்டை வீசிய தருணத்தில் இருந்து, அமெரிக்க ஆயுதங்களின் வலிமை உலக நாடுகளால் எப்போதும் உற்று கவனிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் அமெரிக்க ராணுவத்தின் அடுத்த பெரிய சாதனை அதன் பி-52 ரக குண்டு வீசும் விமானத்தில் இறக்கைப் பகுதியில் இருந்து, புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஏ.ஜி.எம். 183ஏ – ரகத்தைச் சேர்ந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஏவப்பட்டது ஆகும்.
19ஆம் ஆம் நூற்றாண்டு வரை கப்பல்கள் போரின் போக்கைத் தீர்மானிப்பவையாக இருந்தன, 20 ஆம் நூற்றாண்டில் விமானங்களின் ஜெட் எந்திரங்கள் அந்த இடத்தைக் கைப்பற்றின, 21ஆம் நூற்றாண்டில் போர்க்களங்களின் எதிர்காலமாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள்தான் பார்க்கப்படுகின்றன.
மணிக்கு 24,140 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்லக் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையில் ’ரேபிட் ரெஸ்பான்ஸ்’ என்ற தொழில் நுட்பம் உள்ளது. இதனால் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் அதே சமயம் தனது இலக்கு அசைந்தால், அதற்கு ஏற்றபடி தனது பாதையை மாற்றி பயணித்து, இலக்கை தவறாமல் தாக்க இந்த ஏவுகணையால் முடியும்.
இதற்கு முன்புவரை விமானங்களில் இருந்து ஏவபட்ட ஏவுகணைகள் அனைத்திலும் எதிராளி அவற்றைப் பார்க்க நேரம் இருந்தது, தப்பிக்கவும் வாய்ப்பு இருந்தது. ஹைப்பர் சோனிக் ஏவுகணையை விமானத்தில் இருந்து ஏவும் போது, எதிராளிக்கு எந்த வாய்ப்பும் இல்லவே இல்லை. எனவே இது தடுக்கவே இயலாத ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
கலிபோர்னியாவின் எட்வர்டு வான்வெளி மையத்தில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி நடந்த இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தில் உள்ள பி-52 ரக குண்டு வீசும் விமானங்களில் ஹைப்பர் சோனிக் ராக்கெட்டுகளைப் பொருத்தும் பணி 2022 ஆம் ஆண்டில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை போர்க்களப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் திட்டம் நிறைவேறும்.
அமெரிக்கா தவிர ரஷ்யா உள்ளிட்ட வேறுசில நாடுகளிடமும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் உள்ளநிலையில், அந்த நாடுகளும் விமானங்களில் இவற்றைப் பயன்படுத்த இது ஒரு தொடக்கமாக அமையக் கூடும்.
அமெரிக்காவின் சோதனையின் போது ஹைப்பர் சோனிக் ஏவுகணைக்குள் எந்த ஆயுதமும் வைக்கப்படவில்லை, ஆனால் தேவைப்பட்டால் இவற்றில் ஆணு ஆயுதங்களைக் கூடப் பயன்படுத்த முடியும். இதுவரை உலகின் எந்த ஒரு ஹைப்பர் சோனிக் ஏவுகணையும் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது இல்லை என்ற நிலையில், ஹைப்பர் சோனிக் ஏவுகணையை நோக்கி போர் தொழில்நுட்பங்கள் நகர்வது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கணிக்க இயலாததாகவும், அச்சமூட்டுவதாகவும் உள்ளது.