நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை திமுக நிறுத்திவிட்டு, உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மாணவி கனிமொழியின் பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். திமுக தனது அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதையும் வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி, உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் இனி, இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல், வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என உற்றார்களில் ஒருவராக கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.