ரஷ்யாவில் பயணிகள் விமானம் இன்ஜின் கோளாறு காரணமாக, சோளக்காட்டில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 226 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மாஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோலுக்கு யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவைகள் மோதியதால், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை அவசர அவசரமாக சோளக்காட்டில் தரையிறக்கினார். இதில், 9 குழந்தைகள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். 226 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.