உத்தரபிரதேசத்தில் அகோரிகளை காண அலைமோதும் கூட்டம்

உத்தரபிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் குளிரை பொருட்படுத்தாமல் அகோரிகள் நதியில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. இதில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கும்பமேளாவில் உலா வரும் அகோரிகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். மனித வாழ்விற்கு அப்பாற்பட்டு வாழும் அகோரிகளை காண கூட்டம் அலை மோதுகிறது. காசியில் பிணங்களை எரிக்கும் இடத்தில் வாழும் இவர்கள் ஆடைக்கு பதிலாக பிணங்களை எரித்த சாம்பலை பூசி கொள்கின்றனர்.

கும்பமேளா நிகழ்ச்சிக்காக மட்டுமே காசியை விட்டு வெளியே வருவதாகவும் இவர்கள் சொல்லுகிறார்கள். தற்போது உத்தரபிரதேசத்தில் 4 டிகிரி செல்சியஸூக்கு கீழ் வெப்பநிலை நிலவுவதால் மக்கள் கடும் குளிரால் அவதிப்படுகின்றனர். ஆனால் அகோரிகள் எதனையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு குளிர் மற்றும் வெயிலால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கூறுகின்றனர் அகோரிகள்.

Exit mobile version