சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை- மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விசாரணையில், சிபிஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளதால், ஒரு நொடி கூட வீணாகக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி விசாரிப்பார் என்றும், தாமதிக்காமல் உடனடியாக வழக்கின் விசாரணையை தொடங்குமாறும் உத்தரவிட்டனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அளித்த அறிக்கையில், தந்தையையும், மகனையும், விடிய-விடிய போலீசார் லத்தியால் அடித்ததாக நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் 19ம் தேதி நிகழ்ந்த சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி சாட்சிகள் மற்றும் ரத்தக்கறை உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதித்துறை நடுவர் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.