பாகிஸ்தானுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் பாதுகாப்புப் படையினர் சென்ற 2 வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு தமிழர்களும் அடக்கம். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் கனவுகளை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று கூறிய பிரதமர் மோடி, தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் தாக்குதலால் நாட்டு மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், வீரர்களின் உயிர்த்தியாகத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று எதிர்கட்சிகளை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் எதிர்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.