தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் தடை விதிக்கப்பட்டதால் சிலை வடிமைப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விநாயகர் சிலைகளை செய்யும் வடிவமைப்பாளர்கள் தீவிரமாக தங்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய தருமபுரி, அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் சிலை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்து கடந்த 13 ஆண்டுகளாக சிலைகளை விற்பனை செய்து வரும் குடும்பத்தினர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வடிவமைத்த சிலைகளுக்கு தற்போது வண்ணம் பூசி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது, நீர்நிலைகளை பாதிக்காத வகையில் வண்ணங்கள் தீட்டப்படுவதாக குறிப்பிட்ட அவர்கள், பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை விதித்துள்ளதால், அனைத்தும் தேக்கமடைந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
அரை அடி முதல் 11 அடி வரை விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட நிலையில், அரசின் தடையால் கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் சிலைகள் விற்பனையாகவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர், சிலை வடிவமைப்பாளர்கள்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை எதுவும் விதிக்காது என நம்பிய சிலர், விநாயகர் சிலைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். ஆனால் திடீர் தடையால், ஆர்டர் கொடுத்த அனைவரும் கேன்சல் செய்து விட்டனர். இதனால் பல லட்சம் ரூபாயை இழந்ததாக வேதனை தெரிவித்தனர், சிலை வடிவமைப்பாளர்கள். விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கு என்ன செய்யப் போகிறது இவர்களின் கேள்வி…!
நியூஸ் ஜெ செய்திகளுக்காக தருமபுரியில் இருந்து அருண்குமார்…