மும்பையில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை அடுத்து, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனமழையால், சியான், மட்டுங்கா, மாஹிம், அந்தேரி, மலாட் மற்றும் தஹிசார் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரங்களில் 150 முதல் 180 மில்லி மீட்டர் வரைமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 17 விமானங்கள், அருகில் இருக்கும் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
தண்டவாளத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பட்லாபூர் வாங்கனி இடையே 700 பயணிகளுடன் மகாலக்ஷ்மி ரயில் சிக்கியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் அங்கு விரைந்து, நூற்றுக்கணக்கான பயணிகளை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். பின்னர், அவர்கள் பயணம் செய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.