ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க தனது சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள் குழுவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க தனது சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக துணை முதலமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசு நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஸ்ணன், இந்திய தூதரக அதிகாரி ராகேஷ் பனாட்டி, மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, ஹில்டன் ஹோட்டலில், ஹுஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். ரேனு கத்தார், ஹுஸ்டன் பெருநகர பார்ட்னர்ஷிப்பைச் சேர்ந்த சூசன் டேவன்போர்ட் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துச் பேசினர். அப்போது, ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக டாக்டர். ரேனு தெரிவித்தார். இதையடுத்து, தமிழகம் திரும்பியவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்து, தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, இந்திய தூதரக பொறுப்பு அதிகாரி ராகேஷ், ஹுஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர்.ஸ்கரோவ் மற்றும் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் டாக்டர்.விஜயபிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.