அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – வடகொரியா

அமெரிக்கா தனது விரோதப்போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு ஆண்டும் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தநிலையில் வடகொரியா உடனான அணு ஆயுத பேச்சுவார்த்தையை இந்த மாதம் நடக்க இருந்தது. அதனை எளிதாக்கும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் கூட்டு போர் பயிற்சியை தள்ளிவைப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் தெரிவித்தன.

அத்துடன் அணுஆயுத விவகாரத்தில் ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரைந்து செயல்பட வேண்டுமெனவும், விரைவில் சந்தித்து பேசுவோம் எனவும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்தநிலையில், அமெரிக்கா தனது விரோதப்போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

கூட்டு போர் பயிற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் அல்லது ஒருமுறையாவது நிறுத்த வேண்டும் என வடகொரியா வலியுறுத்தி உள்ளது. தனது விரோதப்போக்கு கொள்கையை முற்றிலுமாக கைவிடாமல் அணுஆயுத பேச்சுவார்த்தை நடத்திவிடலாம் என அமெரிக்கா கனவு காணகூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version