சபரிமலைக்கு தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிராக மக்களவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தார்.
சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சபரிமலைக்கு சென்றார். நிலக்கல்லில் அவர்கள் சென்ற வாகனத்தை மறித்த பத்தனம்திட்டார் எஸ்.பி. யதீஷ் சந்திரா, பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் காரில் செல்லலாம் என்றும், மற்றவர்கள் செல்ல அனுமதியில்லை என்றும் கூறினார்.
இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பொன். ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பம்பைக்கு பேருந்தில் சென்றார். இது பெரும் சர்ச்சையான நிலையில், எஸ்.பி. யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு காரில் செல்ல அனுமதி மறுத்த எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்து பேசினார். அப்போது, சபரிமலையில் கேரள அரசின் கடும் கெடுபிடிகள் காரணமாக பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறினார். தேவையின்றி பக்தர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி காவலர்கள் பிரச்சனை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.