நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்கள், புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்படும் எனவும், இதன் மூலம் 15 ஆயிரத்து 700 மருத்துவ இடங்கள் உருவாகும் எனவும் தெரிவித்தனர். சர்க்கரை ஏற்றுமதிக்காக 6 ஆயிரத்து 268 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு மானியம் சென்றடைவதை உறுதி செய்யப்படும் எனவும் கூறினர். சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் உள்கட்டமைப்பு ஏற்படுத்தபடுத்தப்படும் எனவும், ஐநா சபை கூட்டத்தில் இதை பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என்றும் கூறினர். நிலக்கரி சுரங்கங்களில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு நூறு சதவீதம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியாவில் 26 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.