புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சம் என்ற பெயரை மத்திய கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், 2019 ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். இதன்படி குழந்தைகளின் ஆரம்பக்கல்வி 3 வயது முதல் 7 வயது வரை என 5 ஆண்டுகள் இருக்கவேண்டும் என்றும், 3, 5, 8 ஆம் வகுப்புகளில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிதல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலத்துடன் ஹிந்தி மூன்றாவது மொழி என மும்மொழி கொள்கை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்ட பிறகு, புதிய கல்வி கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மாலையில் அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version