கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் உருவாகியுள்ள சுகாதார சீர்குலைவால் அடுத்த ஆறு மாதங்களில் நாளொன்றுக்கு ஆறாயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் இதுவரை இரண்டு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலிவாங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது.
சமூகப்பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகள் ஊரடங்கு என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாட்டமாக உள்ளது. குறிப்பாக குழந்தகளுக்குத் தேவையான சரிவிகித உணவுகள் கிடைப்பதிலும், பல வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளில் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதிலுமே தட்டுப்பாடு நிலவுகிறது.
அதேபோல், கொரோனா அச்சுறுத்தலினால் குழந்தைப் பெறுவதற்கு முந்தைய மருத்துவ உதவிகள், தடுப்பூசிகள் போன்றவை கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலக அளவில் அடுத்த ஆறு மாதங்களில் ஐந்து வயதுக்கும் உட்பட்ட சுமார் ஒன்று புள்ளி இரண்டு மில்லியன் குழந்தைகளின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என ஐநாவின் குழந்தைகளுக்கான நிதி அமைப்பான யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
பதினைந்து சதவீதம் வரை சுகாதார சேவை முடங்கியுள்ள நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஒன்பது புள்ளி எட்டு சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்து 400 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருவில் இருக்கும்போது ஏற்படும் இறப்பு எட்டு புள்ளி மூன்று சதவீதமாக இருக்கும் என்கின்றனர்.
நாற்பத்து ஐந்து சதவீதம்வரை சுகாதார சேவை குறைக்கப்பட்டுள்ள நாடுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் நாற்பத்து நான்கு புள்ளி ஏழு சதவீதமாகவும், கருவிலிருக்கும்போது ஏற்படும் இறப்பு முப்பத்தெட்டு புள்ளி ஆறு சதவீதமாக இருக்கும் எனவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யுனிசெஃப் இங்கிலாந்தின் நிர்வாக இயக்குநர் சச்சா தேஷ்முக், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சர்வதேச அளவில் குழந்தைகள் இப்படி ஒரு சுகாதாரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். முறையாக சுகாதாரத் தேவையும் ஆரோக்கியமான உணவும் குழந்தகளுக்கு கிடைக்க வழிவகை செய்தால் இந்த பேரிழப்பை தடுக்க முடியும் என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.