மெக்சிகோவில் சுரங்கம் மூலமாக பூமிக்கடியில் போதைப்பொருட்கள் கடத்தல்!

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல தொழில்கள் முடங்கி உள்ளன. பல நிறுவனங்கள் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால், இந்த இக்கட்டான நிலையிலும் போதைப்பொருள் மாஃபியாக்கள் எந்த பிரச்னையும் இல்லாமல், போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து கடத்தல்களும் நிலத்திற்கு அடியில், ரகசிய சுரங்கப் பாதைகள் வழியாக நடைபெற்றுள்ளன. மெக்சிகோவில் சுரங்கம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன.

இத்தகைய சுரங்கங்கள் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்படுவதுடன், அவற்றை அழிக்கவும் அதிகாரிகள் தவறுவதில்லை. கடந்த ஜனவரி மாதம் 70 அடி ஆழத்தில் 4,309 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் சுரங்கப் பாதைகளிலேயே இதுதான் மிக நீளமானதாகும்.அதேபோல கடந்த மார்ச் மாதம் சான்டியாகோவில் அதிநவீன சுரங்கப்பாதை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து 3 கோடி டாலர்கள் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தற்போதும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சுரங்கம் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. வடக்கு மெக்சிகோவில் இருந்து கலிபோர்னியாவின் Tijuana பகுதி வரை இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு ஏதுவாக Track எனப்படும் ரயில் பாதையும் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கடத்தல் சம்பவங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக, அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரி Aaron Heitke கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் நடைபெறும் இத்தகைய கடத்தல்கள் மிகவும் அபாயகரமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலின் முடிசூடா மன்னனாக கருதப்படும் எல் சாப்போ ஜோகின் குஸ்மானின் குழுவினர் தான் இத்தகைய கடத்தலில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு சூத்திரதாரியாக திகழும் Jose Villalobos என்பவரை தேடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த கடத்தலில் மேலும் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும், எந்த பகுதிகளுக்கு எல்லாம் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version