புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புல்மாவாயில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் 40வது கூட்டம் ஜெனிவா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சிந்து மற்றும் கைபர் பதுங்குவா பகுதிகளை சேர்ந்த மனித செயற்பாட்டாளர்கள், புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தங்கள் மண்ணில் உள்ள தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் உடனடியாக அழிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் பேசிய ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் அலி கஷ்மீரி, தற்கொலை தாக்குதல் நடத்தும்படி கஷ்மீரிகளை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே வலியுறுத்துவதாக குற்றம் சாட்டினார்.