ஸ்டாலின் புரளி: ஐ.நா. முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மறுப்பு!.

திமுகவின் தலைவர் ஸ்டாலினை ஐ.நா.வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் புகழ்ந்து எழுதியதாக ஒரு தகவலை, திமுகவினர் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் ‘ஸ்டாலின் யார் என்றே தெரியாது’ – என்று அதே ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் டுவிட்டரில் தனது மறுப்பை வெளியிட்டு உள்ளார். திமுகவின் குட்டு எப்படி வெளிப்பட்டது என்று பார்ப்போம் இந்த செய்தித் தொகுப்பில்…

ஐநாவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஜான் எலியாசன் என்பவர், தான் எழுதிய நான் வியந்த உலகத் தலைவர்கள் – என்ற புத்தகத்தில் முக ஸ்டாலின் குறித்து குறிப்பிட்டு இருந்ததாக திமுகவினர் சமூக வலைதளங்களில் சமீப காலமாக ஒரு தகவலைப் பரப்பி வந்தனர்.

அந்த புத்தகத்தின் 372வது பக்கத்தில் ஸ்டாலின் குறித்து ஜான் எலியாசன் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதில் நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர், தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார், அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன், இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்தால் அவரை உலகமே தாங்கி கொண்டு இருக்கும் – என்றெல்லாம் ஜான் எலியாசன் குறிப்பிட்டிருந்ததாகவும் சமூக வலைத்தளப் பதிவுகளில் கூறப்பட்டது. அத்தோடு ஐ.நா. அலுவலகத்தில் ஜான் எலியாசனுடன் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டு இருந்தது. இதே போன்ற புகைப்படங்களை திமுகவின் டி.ஆர். பாலுவும் தனது இணையப் பக்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.

இதனால் டுவிட்டரில் உள்ளவர்கள் சிலர் ஜான் எலியாசனை தொடர்பு கொண்டு இதுபற்றிக் கேட்டனர். அப்போது அதிர்ச்சி அடைந்த ஜான் எலியாசன் அது ஒரு புரளி – என்று சொன்னதோடு, தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விரிவான மறுப்பையும் வெளியிட்டு உள்ளார். அந்த மறுப்பில்,புகைப்படத்தில் உள்ளது போன்ற ஒரு சந்திப்பு நிகழவே இல்லை என்றும், தன்னுடன் ஸ்டாலின் உள்ளது போல இருக்கும் புகைப்படம் போலியானது என்றும், அதில் உள்ள பல விஷயங்கள் செயற்கையாக தயாரிக்கப்பட்டவையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து திமுகவினர் போட்டோஷாப் மூலம் இந்த புகைப்படத்தை உருவாகி உள்ளதை சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் அறிந்து திமுகவை வறுத்து எடுத்து வருகின்றனர். இப்படி ஒரு புகைப்படமே இல்லை எனும் போது ஸ்டாலினை யார் என்றே தெரியாத ஜான் எலியாசன் எப்படி அவரைப் பற்றி எழுதுவார்? – என்றும் அவர்கள் திமுகவினரைக் கிண்டல் செய்து கேள்வி கேட்கின்றனர்.

 

திமுகவினர் இது போல இன்னும் எத்தனைப் புரளிகளைக் கட்டவிழ்த்து உள்ளனர் என்று கணக்கெடும் வேலையையும் சமூக வலைத்தளவாசிகள் தொடங்கி உள்ளனர்.

Exit mobile version