விடியா அரசின் அலட்சியப் போக்கால் 15 மாதங்களாகியும் செயல்படாத ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்!

விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகும் நிலையில் குழுக்கள் அமைப்பது, ஆணையம் அமைப்பது என்று வெற்று விளம்பரப் படம் காட்டி வருவதாக புகார் வாசிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இப்படித்தான் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பை ஸ்டாலின் தொடங்கி வைத்து போட்டோஷூட் எல்லாம் நடத்தினார். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிவக்குமார், துணைத்தலைவராக புனிதப்பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாட்கோ அலுவலகத்தில், ஆணைய செயல்பாட்டுக்காக அலுவலகம் ஒன்றும் திறக்கப்பட்டது. ஆனால் ஆணையம் செயல்பட நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஊழியர்கள் தேவை என்றும் ஆணையத் தலைவர் கோரிக்கை வைத்தும் திமுக அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 10 மாத காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் உள்பட ஆயிரத்து 100 புகார்கள் ஆணையத்தில் அளிக்கப்பட்டும், திராணியற்ற திமுக அரசு இதுவரை அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும்தான் ஆணையம் தொடங்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் இன்று ஆணையம் செயல்பாட்டுக்கான தேவைகளை நிறைவேற்றாததோடு, புகார்கள் மீது நடவடிக்கையும் எடுக்காமல் விளம்பரத்துக்காக சமூக நீதி பேசும் திமுகவின் அரசியல் சாயம் வெளுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

Exit mobile version