அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் ஹூவாய் நிறுவனத்திடமிருந்து 5 ஜி தொழில்நுட்பம் பெறுவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் ஹூவாய் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதற்கான காரணங்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு…
சீனாவை சேர்ந்த ஹூவாய், சர்வதேச அளவில் இரண்டாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது. தொலை தொடர்பு சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, ஹூவாய் நிறுவனம் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக 5 G தொழில்நுட்பத்தில், ஹூவாய் உலக அளவில் முன்னணியில் உள்ளது. ஆனால் அமெரிக்காவுடனான பொருளாதார போட்டி, கொரோனா பரவல், ஹாங்காங் விவகாரம், இந்தியாவுடன் எல்லை மோதல் உள்ளிட்ட காரணங்கள் சீனப் பொருளாதாரத்தை எந்த அளவு பாதித்துள்ளதோ, அதே அளவு ஹூவாய் நிறுவனத்தையும் பாதித்துள்ளது.
அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் நுட்பங்கள் திருடப்படுவதாக கூறி, கடந்த ஆண்டு தகவல் தொழில் நுட்ப அவசரநிலையை அறிவித்தார் அதிபர் டிரம்ப். அதுவரை அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்த ஹூவாய் நிறுவனத்திற்கு, இந்த அவசர நிலை தடை செக் வைத்தது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை மீறி, ஹூவாய் நிறுவனம், வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஹூவாய் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மெங் வாங்சோ, கனடாவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இங்கிலாந்து அரசு, 2027 ஆம் ஆண்டுக்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து ஹூவாய் தயாரிப்புகளை அகற்ற வேண்டும் என தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் எனவும் அந்நாடு தெரிவித்துள்ளது
ஹாங்காங்கில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து இந்த தடையை விதித்துள்ளதாக தெரிகிறது
இந்தியாவும் 5G தொழில்நுட்பத்தை ஹூவாயிடமிருந்து பெற, நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில், லடாக் மோதல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கொரோனா பரவலால் ஏற்கனவே பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வரும் நிலையில், ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை அந்நாட்டுக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.