ஊரடங்கிற்கு முந்தைய மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனை அதிகரிப்பு

இங்கிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு, அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அது தொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸால் உலகெங்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் இங்கிலாந்து மக்களின் வாங்கும் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இங்கிலாந்தில் இருபத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்து நானூறைத் தாண்டியுள்ளது. சமூகப் பரவலைத் தடுப்பதற்காக கடந்த வாரம் முதல் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள இங்கிலாந்து அரசு, நிலைமையைப் பொறுத்து அதை ஆறுமாதம் வரை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட்களில் கூட்டம் அலைமோதுகிறது.  கடந்த பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து இம்மாதம் 21ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை எவ்வாறு இருந்தது என்று மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், முந்தைய மாதங்களை விட 20.5 சதவிகிதம் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதும், ஒவ்வொருவரும் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக ஷாப்பிங் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்காக இங்கிலாந்து மக்கள் செலவிட்டதை விட 1.9 பில்லியன் யூரோ அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு அமலுக்கு வரும் என்ற அச்சத்தில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகமாக வாங்கியுள்ளனர். அதேபோல் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் ஆன்லைன் விற்பனையும் ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது.

Exit mobile version