மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை பதவியேற்கிறார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டது. இதையடுத்து, துணை முதலமைச்சர் பதவியை திடீரென அஜித் பவார் ராஜினாமா செய்தார். தொடர்ந்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் ராஜினாமா செய்ய, மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தன.இதைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி சார்பில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கூட்டணி கட்சித் தலைவராகவும், மாநில முதலமைச்சராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஆளுநர் கோஷியாரியை சந்தித்த உத்தவ் தாக்கரே, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் குழுவாக சென்று ஆளுநரை சந்தித்தனர். தங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதற்கான ஆவணங்களையும் ஆளுநரிடம் வழங்கினர். இதையடுத்து ஆளுநர் கோஷியாரி மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்க உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, மும்பை சிவாஜி பூங்காவில் நாளை மாலை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இதற்கிடையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கோலம்ப்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தை இன்று காலை 8 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் வரை காளிதாஸ் கோலம்ப்கர் தற்காலிக சபாநாயகராகச் செயல்படுவார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், மும்பை வடாலா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version