மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்க உள்ளதால் மும்பை சிவாஜி பூங்காவில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோசியாரி அவருக்குப் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்க உள்ளார். இதற்காக சிவாஜி பூங்காவில் விழா மேடை, காட்சித் திரைகள், அடிப்படை வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவாஜி பூங்கா மிகப்பெரிய திறந்தவெளிப் பகுதி என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பொதுவான திடலை இவ்வாறு விழாக்கள் நடத்துவதற்குப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த சிவாஜி பூங்காவில்தான் சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆண்டுதோறும் தசரா விழாவையொட்டி உரை நிகழ்த்தியதும், அவர் இறந்தபின் உடல் தகனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதனிடையே மகாராஷ்டிரத்தில் அமைச்சரவையில் இடப் பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சிக்கு முதலமைச்சர் பதவியும், அதைத் தவிர 15 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் துணை முதலமைச்சர் பதவியும், 13 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குச் சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் 13 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளன.