மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே வியாழனன்று பதவியேற்க உள்ளதால் மும்பை சிவாஜி பூங்காவில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். மும்பை சிவாஜி பூங்காவில் வியாழன் மாலையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் பகத்சிங் கோசியாரி அவருக்குப் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்க உள்ளார். இதற்காக சிவாஜி பூங்காவில் விழா மேடை, காட்சித் திரைகள், அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவாஜி பூங்கா மிகப்பெரிய திறந்தவெளிப் பகுதி என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பொதுவான திடலை இவ்வாறு விழாக்கள் நடத்துவதற்குப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆண்டுதோறும் தசரா விழாவையொட்டி உரைநிகழ்த்தியதும், அவர் இறந்தபின் உடல் தகனம் செய்யப்பட்டது சிவாஜி பூங்காவில்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.