கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் வாரிசு அரசியலை மட்டுமே கொண்டுள்ள திமுக கட்சியில் இன்றைய தினத்தில் இளைஞரணி தலைவராக மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் தலைவர் ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் வரை இளைஞரணி தலைவராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய சொல்லி அந்த பதவிக்கு உதயநிதியை கொண்டு வரலாம் என திமுக தலைமை நினைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வெள்ளக்கோவில் சாமிநாதனை சமாதானப்படுத்தும் வகையில் திமுகவில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் திமுகவின் இந்த வாரிசு அரசியல் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை விமர்சிக்கும் வகையில் பல்வேறு மீம்ஸ்கள் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக என்ற ஹேஸ்டேக்கும் ட்விட்டரில் தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
திமுகவின் கடந்த காலங்களை எடுத்துப்பார்த்தால் அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகவே இருக்கும். அன்று மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியிடம் வாரிசு அரசியல் குறித்து கேட்டப்போது, “வாரிசு அரசியல் செய்ய திமுக என்ன சங்கர மடமா?” என்று கேட்டார். ஆனால் சொன்னதை காற்றில் பறக்க விட்டு அவரது மகனான மு.க.ஸ்டாலினை திமுகவின் அடுத்தக்கட்ட தலைவராகவும் கொண்டு வந்தார்.
அதேபோல் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது வாரிசு அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் என் குடும்பத்தில் யாரும் இனி அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவித்தார். ஆனால் அப்பாவை போலவே பிள்ளை என்ற வகையில் மகன் உதயநிதியை அடுத்தக்கட்ட தலைவராக கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின். இதன் மூலம் திமுக “குடும்ப கட்சி” என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.