ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2, 461 வீரர்களை உயிரிழந்து பயங்கரவாதிகளை அழித்து பணி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்ப்புக்கு பிறகு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்த அல்கொய்தா அமைப்பின் மீது அமெரிக்கா படையெடுத்தது. அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னரும் அங்கிருந்த அமெரிக்க படையினர், ஆகஸ்ட் 31ம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுதை அடுத்து, அங்கிருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற பல்வேறு நாட்டு விமானங்களும், காபூல் விமான நிலையத்தில் வந்திறங்கின. மக்களை ஏற்றிச்செல்லவும், அமெரிக்க படைகள் வெளியேறவும் இன்று வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானத்தில் வீரர்கள் அனைவரும் கிளம்பினர். காபூலில் இருந்து கடைசி வீரர் கிளம்பிய புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறிய அதிபர் ஜோ பைடன், கடந்த 17 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க குடிமக்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றி இருப்பதாக தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 461 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்து ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழித்து பணி முடித்துள்ளதாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்திருப்பதாகவும் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார்.