நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம்

கேரளாவில் ஐயப்பன் கோவிலிற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி தர வேண்டும் என 2006-ல் கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி விசாரித்த முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு , அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கினார்.நான்கு நீதிபதி கொண்ட அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா , நீதி மையங்கள் மக்களின் இறை நம்பிக்கை மீது நீதி வழங்குதல் சரியன்று என்று கூறி மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.

இதனை தொடரந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை, மறு பரிசீலனை ஏதுமின்றி பின்பற்ற இருப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பிற்காக அண்டை மாநிலங்களில் இருந்து பெண் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். .ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள், கேரள மக்களை ஒன்று திரட்டி அக்டோபர் 2-ஆம் தேதி அன்று ஊர்வலம் நடத்தினர்

மேலும் கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரமேஷ் சென்னிதலா பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் தேவசம் போர்டு உறுப்பினர்களை அழைத்து கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறு சீராய்வு செய்ய வேண்டும் என மூன்று மறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் டிசம்பர் மாதம் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர். ஆனால் சபரிமலை பக்தர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அவர்கள் பாதியிலேயே அனுப்பப்பட்டனர்.இதே போன்று சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 11 பெண்கள் சபரிமலை சென்றனர். இவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி கேரளாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் பங்கேற்ற மாபெரும் ‘பெண்கள் மதில்’ மனித சங்கிலி நடைபெற்றது திருவனந்தபுரம் முதல் வடக்கு பகுதியான காசர்கோடு வரை 620 கி.மீ நீளத்திற்கு இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டது. பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து வலுக்க, இன்று கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் சபரிமலை சன்னிதானத்திற்குள் சென்ற சுவாமியை வழிப்பட்டனர்.

இன்று அதிகாலை 3.45 அளவில் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் சபரிமலை ஐயப்பனை 18 படி ஏறாமல் மாற்றுப்பாதை வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இவர்கள் ஏற்கனவே டிசம்பர் மாதம் கோவிலுக்குள் செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது

பல்வேறு போராட்டங்கள் மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்றதால் கோவில் நடை சாத்தப்பட்டு பின் பரிகார பூஜைகள் செய்து கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 2 பெண்கள் தற்போது சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மேலும் கூடுதலாக பெண்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version