சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு!

சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் நிலையில், தினமும் 250 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறாது என்றும், நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்ற வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில், தினமும் 250 பேர் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 48 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றை வழங்குவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைகளையொட்டி வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறுகின்றன. 21-ம் தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், அரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படுகிறது.

இதனிடையே, நாளை காலை 9 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு, குலுக்கல் முறையில் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மேல்சாந்திகள், நவம்பர் 15-ம் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு சபரிமலையில் தங்கி இருந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறை வேற்றுவார்கள்.

Exit mobile version